Friday, February 1, 2013

ஜப்பானியர்களிடம் கற்றுக்கொண்ட பாடம்!


ஜப்பானியர்களிடம் கற்றுக்கொண்ட பாடம்!


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற 9 தமிழக மாணவர்கள் ஜப்பான் சென்று திரும்பியிருக்கிறார்கள்.

த்தாம் வகுப்பில் மாநில அளவில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை ஜப்பானில் நடைபெற்ற மாநாட்டிற்கு அரசு அனுப்பி வைத்தது. கிட்டதட்ட  6 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் இந்தியாவிலிருந்து 92 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து ஜப்பான் செல்ல 9 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஜப்பான் செல்ல தேர்வு செய்யப்பட்டவர்களில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களும் இருக்கிறார்கள் என்பது அரசுப் பள்ளிகளுக்குக் கிடைத்த பெருமை.

தனது படிப்பின் மூலம் ஜப்பான் செல்லும் வாய்ப்பைப் பெற்ற சங்கர் சாமானியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கருவலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவரான அவர் தமது பயண அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ”தமிழ்நாட்டுல இருந்து மொத்தம் 9 பேர் போனோம். 4 பசங்க, 5 பொண்ணுங்க. எங்ககூட திருமால்னு அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருத்தரும் வந்திருந்தாரு. JICE-ங்கிற அமைப்புதான் எங்கள கூப்பிட்டு போனாங்க. எங்களுக்கான செலவு முழுவதையும் அவங்களே ஏத்துக்கிட்டாங்க.  எங்களை அவங்க அழைச்சுட்டு போனதே, ஜப்பான் நாடு சுனாமில இருந்து எவ்வளவு விரைவா மீண்டிருக்குதுனு காட்டத்தான். நாங்க ஹொக்கெய்டோ, டோக்கியோ, சிட்டோசேங்கிற  இடத்துக்கெல்லாம் போனோம். நாங்க அங்க போனப்போ, சுனாமி தாக்குன சுவடே இல்லாம மாறி இருந்தது. அவ்வளவு விரைவா பணிகள் நடந்துருக்கு. அதுமட்டுமில்லாம ஜப்பானியர்களைப்பத்தி சொல்லணும்னா, கிரேட்! சுறுசுறுப்பு, நேரம் தவறாமை, பணிவு இதெல்லாம் அவங்ககிட்ட கத்துக்கலாம். அங்கே இருந்த ஒரு ஜப்பானியர் வீட்டுல இரண்டு நாள் தாங்கினோம். அவங்க எங்களை பெத்த புள்ள மாதிரி பார்த்துக்கிட்டாங்க. ஜப்பான்ல சாதாரணமா வீட்லகூட தானியங்கி கதவுகளையும், விளக்குகளையும்தான் பயன்படுத்தறாங்க. அதே மாதிரி அவங்க பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தற்றாங்க. உதாரணதுக்கு அங்க லிப்டுல போறப்ப நிலநடுக்கம் வருகிற மாதிரி இருந்த அந்த லிப்ட் தானாவே கீழே வந்துடும். மேல போகாது. அங்கேயெல்லாம் வீதியில் குப்பையே கிடையாது. அவ்வளவு சுத்தமா இருக்குது. அந்த நாடு மாதிரி நம்ம நாட்டையும் சுத்தமானா நாடா மாத்தனும்னு ஆசையா இருக்குது" என்று பிரமிப்புடன் முடித்தார் சங்கர்.

ஜப்பான் போய் வந்த மற்றொரு மாணவி சுமையா, உடுமலை பாரதியார் நூற்றாண்டு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். ”சுனாமில இருந்து மீள ஜப்பானுக்கு இந்தியா உதவி செஞ்சதால நம்ம இந்தியாவிற்க்கு நன்றி சொல்ற புரோகிராம் தான் முதல நடந்துசு. ஜப்பான்ல 10 நாள் நாங்க என்ன பண்ண போறோம்னு டைம் டேபிள் போட்டுக் கொடுத்துட்டாங்க. அதுல ஹோம் ஸ்டே, ஹை ஸ்கூல் விசிட் னு நிறைய புரோகிராம் இருந்துச்சு. ஜப்பான் ஸ்கூல்ல ஒவ்வொரு ஸ்டூடண்ட் கையிலும் லேப்டாப் இருக்கு. நாங்க அவங்களோட பேச நினைக்கிறதை இங்கிலீஷ்ல டைப் பண்ணினா,  அவங்களுக்கு அதை ஜப்பானிஸ் மொழியில காட்டும்.  அவங்ககூட பேப்பர் ஆர்ட், கலந்துரையாடல்னு நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகிட்டோம்.  ஒழுக்கம், நேரந்தவறாமலை, சிக்கனம் போன்ற பண்புகளை ஜப்பானியர்களைப் பார்த்து நாங்க தெரிஞ்சுகிட்டோம். 2025-க்கான வளர்ச்சியை ஜப்பான் இப்பவே அடைஞ்சிருக்கு. ஜப்பானிய மக்கள் அவங்க தாய்மொழிக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறாங்க. ஜப்பான் தொழில்நுட்பத்துல பெஸ்ட்னா, நம்ம இந்தியா கலாசாரத்துல பெஸ்ட்" என புன்னகையுடன் முடித்தார் சுமையா.

No comments:

Post a Comment